புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

18 April 2016

பறை என்பது என்ன ?


பறை


ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது.

அமைப்பு

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.

இசைக்கும் முறை

தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி 'சிம்புக்குச்சி' அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர். அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும்.
குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

சொற்கட்டுகள்

தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது 'பேசு' அல்லது 'சொல்' என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
  • டன்டனக்கு டனக்குனக்கு
  • டன் டன் டன் டன்டனக்கு
  • ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
  • ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.

இன்றைய நிலை

தற்காலத்தில் தலித் மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், சமூக விடுதலையின் அடையாளமாகவும் பறையை முன்னிறுத்தி தலித் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழாக்கள், நிகழ்ச்சிகளில் பறை முக்கிய இடம்பெற்று வருகிறது. கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.


No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...